Nam Pappa Paattu
- VIKASH ACHUTARAMAIAH

- Dec 8, 2021
- 2 min read
Updated: Dec 11, 2024
நம் பாப்பா பாட்டு

முண்டாசுக் கவிஞன்.
காலனை காலால் மிதிக்கிறேன் என்றவன்.
காலம் கடந்தவன்.
தன் கவிதையில், அதில் உள்ள சொல்லில், அதன் பொருளில் என எல்லாமாய் இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
அன்று…
நம் குழந்தைகளுக்காக பாப்பா பாட்டு
பாடினான்..
இன்று…
“கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்பர். அதுபோல் மகாகவி பாரதி வீட்டுக் கட்டுத்தறியாய் நானும், நம் குழந்தைகளுக்காக, அவன் பாடிய சந்தத்திலேயே பாடுகிறேன்.
இப்பாடலை இக்கவிக்கே அர்ப்பணம் செய்கிறேன்.
Image courtesy: Artist Jeevanathan
நம் பாப்பா பாட்டு
தாயும் தந்தையும் பாப்பா!- கண்
காணும் தெய்வமடி பாப்பா!
ஞானமே குரு பாப்பா! - நிதம்
ஞான வேள்வி செய் பாப்பா!
தெய்வ அருள் வேண்டி பாப்பா! - நீ
நாளும் தொழுதிடடி பாப்பா!
தியானம் செய்திடடி பாப்பா! - அகத்
தூய்மை மிகத்தேவை பாப்பா!
உணவே மருந்துதான் பாப்பா! - உடற்
பயிற்சி தவறாதே பாப்பா!
நூலகம் செல்வாய் பாப்பா! - பல
நூல்கள் கற்றுணர் பாப்பா!
எல்லோரும் சமம் பாப்பா! - நல்
நட்பு பாராட்டு பாப்பா!
சோர்வை தூக்கி எறி பாப்பா! - சுறு
சுறுப்பாய் இயங்கிவிடு பாப்பா!
அலர்ந்த மலரைப் போல் பாப்பா! - முக
மலர்ந்து சிரித்திடுவாய் பாப்பா!
பொறுமை வென்றுவிடு பாப்பா! - பார்
உன்னைப் புகழுமடி பாப்பா!
தவறை கண்டவுடன் பாப்பா! - நீ
துணிந்து எதிர்த்திடுவாய் பாப்பா!
ஆசையை கவனி பாப்பா! - பே
ராசை பெரும் பேயே பாப்பா!
போட்டித் திறன் வளர்க்கும் பாப்பா! - பொ
றாமை தாழ்த்திவிடும் பாப்பா!
பணம் தேவையே பாப்பா! - உன்
தேவைக்கே பணம் பாப்பா!
பதவி வந்ததும் பாப்பா! - உடன்
பணிவால் உயர்ந்திடுவாய் பாப்பா!
கடுமையாய் உழை பாப்பா! - நல்லத்
தலைவியாகி விடு பாப்பா!
அச்சமுனக் கெதற்கு பாப்பா! - அதை
துச்சமென மிதிப்பாய் பாப்பா!
பொய்யை வென்றிடவே பாப்பா! - உயர்
மெய்யில் நின்றிடுவாய் பாப்பா!
துயரைக் கண்டவுடன் பாப்பா! - உடன்
உதவிக் கரம் நீட்டு பாப்பா!
பசியின் கொடுமையது பாப்பா! - அதை
நசிக்க ஆவன செய் பாப்பா!
எதையும் நம்பாதே பாப்பா! - பகுத்
தறிந்து ஏற்றுக்கொள் பாப்பா!
பயணம் செய்திடுவாய் பாப்பா! - பட்
டறிவு தேவையடி பாப்பா!
பெருமைப்பட வேண்டும் பாப்பா! - தற்
பெருமை தலைக்கனமே பாப்பா!
செயற்கையை அறி பாப்பா! - அது
இயற்கைக்கு ஈடோ பாப்பா!
அரிய செயலெலாம் பாப்பா! - நீ
எளிய செயலாக்கு பாப்பா!
பரிவு வேண்டுமடி பாப்பா! - உன்
பண்பே செல்வமடி பாப்பா!
தோல்வியைத் தழுவு பாப்பா! - அது
இல்லா வெற்றியில்லை பாப்பா!
வெற்றி தோல்வி ரெண்டும் பாப்பா! - அது
பார்ப்பவரைப் பொறுத்து பாப்பா!
இன்பம் எங்கென பாப்பா! - நீ
தேடித் திரியாதே பாப்பா!
இன்பம் உன்னுள்ளே பாப்பா! - நீ
ஆழ்ந்து அறிந்திடுவாய் பாப்பா!






Comments